சுடுகாடு-கடற்கரை செல்லும் பாதை ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
பொதுமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு பாதிக்கப்பட்டது.
கோட்டைப்பட்டினம்:
ஜெகதாப்பட்டினம் அருகே ஏம்பவயல் மற்றும் அய்யம்பட்டினம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு இப்பகுதியில் சுடுகாடு உள்ளது. மேலும் மீன் பிடிக்க கடற்கரை பகுதிக்கு செல்லும் பாதையும் உள்ளது. இந்நிலையில் அந்த சுடுகாட்டுக்கு செல்லும் பாதை மற்றும் கடற்கரைக்கு செல்லும் பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டைப்பட்டினம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் இது சம்பந்தமாக அதிகாரிகள் கலந்து ஆலோசித்து விரைவாக தீர்வு ஏற்படுத்துவார்கள் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.