தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி, பொதுமக்கள் குறைகள் பற்றிய பதிவுகள்
திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்
திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் கிளைச்சிறை, குழந்தைகள் நல அலுவலகம், சார் பதிவு அலுவலகம், சார் கருவூல அலுவலகம், உழவர் சந்தை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளன. அதில் உழவர் சந்தைக்கு செல்லும் வழியில் நில அளவீடு துறை அலுவலகத்துக்கு எதிரே உள்ள கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்வோர் கால்வாயில் தவறி விழுந்து விடுகிறார்கள். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை மூட வேண்டும்.
-லிங்கம், திருவண்ணாமலை.
ெபயர் பலகையை தமிழில் எழுதுவார்களா?
வேலூர் கோட்டை முகப்பு பகுதியில் தொல்லியல் துறை அலுவலகம் உள்ளது. இங்கு பாலித்தீன் (நெகிழி) பொருட்கள் இல்லாத பகுதி என அறிவிப்பு பலகை மாட்டப்பட்டு உள்ளது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ள இந்த அறிவிப்பில், தமிழ் இருக்கு ஆனா இல்லை என்பது போன்று, ஆங்கில வார்த்தை உச்சரிப்பை (பாலித்தீன் பிரி ஜோன்) என அப்படியே தமிழில் எழுதி வைத்து உள்ளனர். முறையான தமிழாக்கம் செய்து தகவல் பலகை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தமிழ்ச்செல்வன், வேலூர்.
மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி தூண்கள் பழுது
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன்பாளையம் ஊராட்சியில் சமுத்திரம் 2-வது வார்டு கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலை அருகில் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியின் கான்கிரீட் பில்லர் சேதம் அடைந்துள்ளது. அதில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகிறது. அதைச் சீர் செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-எம்.ஜெகதீசன், நல்லவன்பாளையம்.
பிரசவ வார்டில் மின் விசிறி வசதி
குடியாத்தம் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் மின்விசிறி வசதி இல்லாததால் ெவளியே வராண்டாவில் உள்ள ஒரு மின்விசிறியின் கீழே கர்ப்பிணிகள், அவர்களுடன் வந்த உதவியாளர்கள், பார்வையாளர்கள் அமர்ந்துள்ளனர். கோடை வெயில் சுட்டெரிப்பதால் கர்ப்பிணிகள் மின்விசிறிகள் இல்லாமல் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பிரசவ வார்டில் மின்விசிறி வசதி செய்து தர வேண்டும்.
-பாசில், குடியாத்தம்.
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே சாய்ந்த நிலையில் மின் கம்பம் ஒன்று உள்ளது. அந்த மின் கம்பம் கீழே விழாமல் இருக்க மற்றொரு மின்கம்பம் பக்கவாட்டில் முட்டுக் கொடுக்கப்பட்ட நிலையில் இருந்தது. முட்டுக் கொடுக்கப்பட்ட மின் கம்பம் வளைந்த நிலையில் இருப்பதால் இந்த மின் கம்பம் எந்த நேரமும் சாய்ந்து விழும் என்ற அச்சம் உள்ளது. எனவே வளைந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.
வீணாகும் குடிநீர்
வேலூர் கோட்டையில் உள்ள காவல் பயிற்சி பள்ளி எதிரில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகனசுந்தரம், வேலூர்.
நூலக கட்டிடம் பழுது
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாராஞ்சி கிராமத்தில் 15 ஆண்டுகளாக ஊர்ப்புற நூலகம் செயல்பட்டு வருகிறது. அந்த நூலக கட்டிடம் பழுதடைந்துள்ளது. புத்தகங்களை அடுக்க இடம் இல்லாமல் கீழே அடுக்கி வைக்கும் நிலை உள்ளது. கட்டிடத்தில் ஏற்பட்ட விரிசலால் மழை பெய்யும் நேரத்தில் நீர் உள்ளே சொட்டு சொட்டாக விழும். அங்கு வாசகர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. எனவே அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டிக்கொடுக்க வேண்டும்.
-இளையராஜா, பாராஞ்சி.
சேதமான பாலத்தை சீரமைக்க வேண்டும்
ஆரணி-குடியாத்தம் நெடுஞ்சாலையில் அணைக்கட்டு அடுத்த வீரப்பன்பட்டி செல்லும் சாலையில் 2021-ம் ஆண்டு இறுதியில் பெய்த மழையால் பாலம் சேதம் அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் 7 மாதமாக சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான பாலத்தை சீரமைக்க வேண்டும்.
-எஸ்.கவினேஷ், வீரப்பன்பட்டி.
தாய்-சேய் நல விடுதி கட்டிடம் சேதம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மேல்சீசமங்கலம் கிராமத்தில் தாய் சேய் நல விடுதி கட்டிடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்டித்தருமாறு ேகட்டுக்கொள்கிறோம்.
-சதீஷ்குமார், செய்யாறு.