கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;

Update: 2022-05-09 18:24 GMT
ஆலங்குடி:
முத்துமாரியம்மன் கோவில்
ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி பூச்சொரிதல் விழா கடந்த 24-ந்தேதியும், 1-ந் தேதி முத்துமாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் விழாவும் நடைபெற்றன. தொடர்ந்து 12 கிராமமக்கள் தங்களது வீடுகளிலும்,  முத்துமாரியம்மன் கோவில் வாசலிலும் பொங்கல் வைத்து வழிபட்டனர். 
இதையடுத்து நேற்று பக்தர்கள் பால்குடம், காவடி, அலகுகுத்தியும், பறவைக்காவடி எடுத்தும், கரும்பு தொட்டில் எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். 
தேரோட்டம் 
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் முத்துமாரியம்மன் திருத்தேரில் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்தது.  முக்கிய வீதிகளில் பக்தர்கள் தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. 
 தேரோட்டத்தில் பொதுமக்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலங்காடு, கல்லாலங்குடி, பள்ளத்திவிடுதி, காட்டுப்பட்டி, கட்ராம்பட்டி, கோவில்பட்டி, கீழாத்தூர், கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, காட்டுப்பட்டி உள்பட 12 கிராமமக்கள் செய்திருந்தனர். 

மேலும் செய்திகள்