பட்டுக்கூடுகளுக்கு உரிய விலை வழங்க கோரி பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பட்டுக்கூடுகளுக்கு உரிய விலை வழங்க கோரி பட்டு வளர்ச்சி துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-05-09 18:11 GMT
புதுக்கோட்டை:
பட்டுக்கூடுகள் உற்பத்தி
புதுக்கோட்டை மாவட்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தியில் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்த பின் புதுக்கோட்டையில் உள்ள பட்டுவளர்ச்சி துறை தொழில்நுட்ப மையத்தில் விற்பனை செய்வதுண்டு. இந்த நிலையில்  இன்று காலை மாவட்டத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சரக்கு வேன்கள் உள்ளிட்டவற்றில் பட்டுக்கூடுகளை விற்பனைக்காக புதுக்கோட்டையில் உள்ள பட்டுவளர்ச்சி துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். ஆனால் நேற்று மாலை 3 மணி வரை அவை கொள்முதல் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது. மேலும் ஒரு கிலோ பட்டுக்கூடுகளை ரூ.300-க்கு கொள்முதல் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அலுவலகத்தையும், அதிகாரிகளையும் விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உரிய விலை நிர்ணயிக்க கோரிக்கை
பிற மாவட்டங்களில் பட்டுக்கூடுகளை கிலோ ரூ.600 முதல் ரூ.800 வரைக்கும் அரசு கொள்முதல் செய்வதாகவும், புதுக்கோட்டையில் மட்டும் விலை குறைவாக உள்ளதாக கூறி அதிருப்தி அடைந்தனர். மேலும் பட்டுக்கூடுகளை தரம் நிர்ணயம் செய்து உரிய விலை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டனர். 
இதனால் நேற்று மாலை அந்த அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயிகள் கொண்டு வந்த பட்டுக்கூடுகள் மூட்டை, மூட்டையாக சரக்கு வேன்களில் அடுக்கி வைக்கப்பட்டு வரிசையாக நின்றது. மேலும் அலுவலக வளாகத்தில் தரையிலும் பட்டுக்கூடுகள் கொட்டப்பட்டு கிடந்தன.
ஊழியர்கள் பற்றாக்குறை
விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கையில் அலுவலகத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் பட்டுக்கூடுகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது எனவும், பட்டுக்கூடுகளை தரம் நிர்ணயம் செய்து அதன் அடிப்படையிலும், அரசின் விலை நிர்ணயம் படி கொள்முதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர். அதன்பின் விவசாயிகளிடம் பட்டுக்கூடு கொள்முதல் செய்யப்பட்டன. பட்டுவளர்ச்சி துறை தொழில்நுட்ப சேவை மையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும் என விவசாயிகளும் கோரிக்கை  விடுத்தனர்.

மேலும் செய்திகள்