கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.;

Update:2022-05-09 23:39 IST
புதுக்கடை, 
கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சித்திரை திருவிழா 
புதுக்கடை  அருகே உள்ள கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம், இந்து சமய மாநாடு போன்றவை நடந்தது. திருவிழாவை முன்னிட்டு நேற்று காலையில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. 
இந்த ஊர்வலம் மார்த்தாண்டம் நல்லூர் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவிலில் இருந்து தொடங்கியது. இதில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஒலிபெருக்கி முன் செல்ல முத்துக்குடை ஏந்திய மகளிரும், தாலப்பொலியுடன் மகளிரும், மூன்று யானைகளுடன் முளைப்பாரி ஏந்திய பெண் பக்தர்களும், விளக்கு கட்டுகளுடன் தெய்வத்தின் வேடங்கள் இட்ட பக்தர்களும், பால்குடம் ஏந்தி ஆயிரக்கணக்கான பக்தர்களும் ஊர்வலமாக சென்றனர். மேலும், சந்தன காவடி, நல்லெண்ணெய் காவடி, பூ காவடி, பறக்கும் காவடி போன்றவையும் இடம்பெற்றன.  
 ஊர்வலமானது வெட்டுமணி, காப்புக்காடு, முன்சிறை, புதுக்கடை வழியாக கோவிலை வந்தடைந்தது. 
சமய மாநாடு
அதன் பின்னர் அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர் அபிஷேகம், பாலமுருகனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் அம்மனின் வடவீதி பவனி, இரவு அம்சி நல்லதம்பி தலைமையில் சமய மாநாடு, நள்ளிரவில் பள்ளி வேட்டை, அம்மன் துயில்கொள்ளும் நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது. 
விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் குமார், செயலாளர் சந்திரகுமார், பொருளாளர் சவுந்தர்ராஜன், துணைத் தலைவர் முருகன், இணைச்செயலாளர் துளசிதாஸ் ஆகியோர் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்