தர்மபுரியில் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-05-09 23:36 IST
தர்மபுரி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டல அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மண்டல செயலாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சிவன் வரவேற்று பேசினார். அ.திமு.க. நகர செயலாளர் பூக்கடை ரவி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாநில போக்குவரத்து பிரிவு இணைச்செயலாளர் அன்பு, அமைப்பு சாரா பிரிவு இணைச்செயலாளர் சிங்கராயன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். தொழிலாளர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே பணப்பலன்களை வழங்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 78 மாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், நகர அவைத்தலைவர் அம்மா வடிவேல், நகராட்சி கவுன்சிலர்கள் மாதேஷ், நாகேந்திரன், செந்தில்வேல், சுரேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொருளாளர் முனிரத்தினம் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்