கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-05-09 18:06 GMT
கிருஷ்ணகிரி:
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். செயலாளர் மணி, மாவட்ட தலைவர் சந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் முருகேசன் வரவேற்று பேசினார். அதேபோல் தளி ஊராட்சி வளர்ச்சித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் நடராஜன், மின்துறை ஊழியர் சங்கம் நந்தகுமார், மாவட்ட மகளிர் அணி துணைக்குழு ஜெகதாம்பிகா, சத்துணவு ஊழியர் சங்கம் மஞ்சுளா, ஊரக வளர்ச்சித்துறை சரவணன், கோபால கண்ணன், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சக்திவேல், ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் அரசு ஊழியர்கள், சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்