வாகன கணக்கெடுப்பு பணி மும்முரம்
வால்பாறை பொள்ளாச்சி மலைப்பாதையில் வாகன கணக்கெடுப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.
வால்பாறை
கணக்கெடுப்பு பணி
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக வாகனங்கள் கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கடந்த 6-ந் தேதி முதல் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
வால்பாறை உட்கோட்டத்தில் உள்ள 120 கிலோ மீட்டர் சாலையில் செல்லும் வாகனங்களை கணக்கெடுக்கப்படுகிறது. அதன் மூலம் சாலை பராமரிப்பு, விரிவாக்கம், வாகனங்கள் மலைப்பாதை சாலையில் செல்வதில் இடையூறு இருந்தால் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வாகன போக்குவரத்தின் எண்ணிக்கை அடிப்படையில் சாலை பராமரிப்பை துரிதப்படுத்தவும், சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற அரசுக்கு பரிந்துரை செய்யவும், இணைப்பு சாலை அமைப்பது, பாலங்கள் கட்டுவது, விபத்து தடுப்பு அறிவிப்பு பலகைகளை வைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு கணக்கெடுப்பு உதவியாக இருக்கும் என்று நெடுஞ்சாலைதுறையினர் தெரிவித்து உள்ளனர்.
சாலை பராமரிப்பு
தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நவீன தொழில்நுட்ப வாகன உதவியுடன் வாகன கணக்கெடுப்பு மற்றும் சாலைகளின் தன்மை, சாலை பராமரிப்பு குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கணக்கெடுக்கும் பணி வருகிற 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதன் பின்னர் கணக்கெடுப்பு விவரங்கள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை சாலை, வால்பாறை-கேரள மாநிலம் சாலக்குடி சாலையில் வாகன போக்குவரத்து அன்றாடம் அதிகமாக உள்ளது தெரியவருகிறது.
எனவே, சாலக்குடி-பொள்ளாச்சி-வால்பாறை மலைப்பாதை சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.