மூதாட்டிக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கிய கலெக்டர்
தினத்தந்தி செய்தி எதிரொலியின் காரணமாக மூதாட்டிக்கு வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டா் மோகன் வழங்கினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த காட்ராம்பாக்கத்தை சேர்ந்தவர் ராசு மனைவி முத்தம்மாள் (வயது 100). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள இ-சேவை மையத்தில் ஆதார் அட்டைக்காக விண்ணப்பித்தார். அதற்காக அவர், தன்னிடமிருந்த 1995-ல் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை மற்றும் 2005-ல் வழங்கப்பட்ட ரேஷன் கார்டு ஆகியவற்றை ஆவணமாக கொடுத்தார். அப்போது அங்கிருந்த இ-சேவை மைய ஊழியர்கள், புதிய வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வேண்டுமென முத்தம்மாளிடம் கேட்டனர். புதிய ஆவணங்கள் இல்லாததால், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியாமல் அவர் ஏமாற்றத்துடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இதுகுறித்து நேற்று முன்தினம் தினத்தந்தி நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி பிரசுரமானது.
இதையடுத்து அரசு துறை அதிகாரிகளை அழைத்து மூதாட்டி முத்தம்மாளுக்கு உடனடியாக உதவி செய்யும்படி கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று முத்தம்மாளை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து அவருக்கு புகைப்படத்துடன் கூடிய வண்ண வாக்காளர் அடையாள அட்டையை கலெக்டர் மோகன் வழங்கினார். மேலும் கலெக்டரின் அறிவுறுத்தலின்பேரில் முத்தம்மாளுக்கு புதிய மின்னணு ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்து இணையதளத்தில் பதிவு செய்து அதற்குரிய சான்றும் வழங்கப்பட்டது.