ராமேசுவரம் அருகே ஆர்ப்பாட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படகுகளை மீட்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டமும் அறிவிக்கப் பட்டுள்ளது.
ராமேசுவரம்,
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. படகுகளை மீட்க வலியுறுத்தி சாலை மறியல் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் தவிப்பு
ராமேசுவரத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற ஒரு படகு மற்றும் 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் 12 பேரையும் உடனடியாக விடுதலை செய்யவும், ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கவும், கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரையிலும் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட அனைத்து விசைப்படகுகளுக்கும் அரசு உரிய நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தி நேற்று ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரே அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்க பிரதிநிதிகள் சேசுராஜா, சகாயம், எமரிட், மகத்துவம் பாரம்பரிய மீனவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி சின்னத்தம்பி உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.
சாலை மறியல்
தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்களின் 175 படகுகளுக்கு அரசால் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
இதில் விடுபட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட படகுகளுக்கும் அரசு நிவாரணம் வழங்குவதோடு, அந்த நிவாரணத்தை விரைவில் வழங்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க வலியுறுத்தி வருகிற 16-ந்தேதி தங்கச்சிமடத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.