ஆயல்கிராமத்தில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி
ஆயல்கிராமத்தில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சோளிங்கர்
சோளிங்கரை அடுத்த ஆயல் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் கட்டைக்கூத்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 5-வது நாளான நேற்று அர்ஜுனன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.
இதில் அர்ஜுனன் வேடமணிந்தவர் மரத்தின் உச்சியில் தவமிருந்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை, குங்குமம், மஞ்சள், மாங்கல்ய கயிறு, வில்வம் இலை உள்ளிட்ட பொருட்களை பக்தர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தை வரம் வேண்டி வழிபாடு செய்தனர்.
சோளிங்கர் ஒன்றிய குழு உறுப்பினர் வேண்டா சரவணன், ஆயல் ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட பல்வேறு கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.