குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை

சின்னதளிகை கிராமத்தை சேர்ந்த பெண்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2022-05-09 17:37 GMT
நாமக்கல்:
காலிக்குடங்களுடன் முற்றுகை
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் தளிகை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னதளிகை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு காலிகுடங்களுடன் திரண்டு வந்து முற்றுகையிட்டனர். 
பின்னர் அவர்கள் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
குடிநீர் பிரச்சினை
சின்ன தளிகை கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் பிரச்சினை நீடித்து வருகிறது. ஆழ்துளை கிணறுகள் எல்லாம் பழுதடைந்த நிலையில் உள்ளன. ஜேடர்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கக்கூடிய குடிநீரும் கடந்த 2 மாதங்களாக வரவில்லை. இதனால் பொதுமக்களாகிய நாங்கள் காட்டு பகுதியில் உள்ள தனிநபர்களின் விவசாய கிணறுகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வருகிறோம்.
2020-2021-ம் ஆண்டிற்கான 15-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.5 லட்சத்து 66 ஆயிரம் குடிநீர் தேவைக்கு ஒதுக்கப்பட்டும், அந்த பணி முடிந்து இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே கலெக்டர் எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்