விசைத்தறி அதிபர் குத்திக்கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு

திருச்செங்கோடு அருகே விசைத்தறி அதிபர் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2022-05-09 17:37 GMT
நாமக்கல்:
விசைத்தறி அதிபர்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி கந்தசாமி நகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 49). விசைத்தறி அதிபர். இவருக்கும், திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்த தனபால் என்கிற மொண்டி தனபால் (37) என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ந் தேதி தேவனாங்குறிச்சியில் இருந்து வெப்படை நோக்கி குப்புசாமி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். 
குத்திக்கொலை
செம்மங்கல்மேடு என்ற இடத்தில் சென்றபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் குப்புசாமியை கத்தியால் குத்தினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.  இது தொடர்பாக திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தனபால் மற்றும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான கமல் என்கிற கமலகண்ணன் (39) ஆகிய இருவரும் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் குப்புசாமியை குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தனபால், கமலகண்ணன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு நாமக்கல் எஸ்.சி, .எஸ்.டி. சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது தனபால் இறந்து விட்டார். இந்தநிலையில் வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. நீதிபதி நந்தினி குற்றம் சாட்டப்பட்ட கூலித்தொழிலாளி கமல் என்கிற கமலகண்ணனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். 
இதையடுத்து அவர் போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்