கார் மீது ஆட்டோ மோதி விபத்து 4 பேர் படுகாயம்
துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது கார் மீது ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூதாட்டி உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிணத்துக்கடவு
துக்க நிகழ்ச்சி
கோவை மாவட்டம் சாய்பாபா காலனி சேர்மன் ராஜ் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி நாகலட்சுமி (வயது 38). நாகலட்சுமி தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக கிணத்துக்கடவு அருகே உள்ள நெகமம் கருமாபுரம் பகுதிக்கு சென்றார்.
அவருடன் உறவினர் சதீஷ்குமார் (34), தேஜாஸ்ரீ (3), சுசிலா (65), ஜனார்த்தனன் (9) ஆகியோரும் சென்றனர். ஆட்டோவை சதீஷ்குமார் ஓட்டினார்.
துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நாகலட்சுமி உள்பட 5 பேரும் ஆட்டோவில் சொந்த ஊருக்கு திரும்பினர்.
கோவை-பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் சிங்கராம் பாளையம் பிரிவு பகுதியில் ஆட்டோ வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த கோவை உக்கடத்தை சேர்ந்த சஜூன் (20) என்பவரின் கார் மீது ஆட்டோ வேகமாக மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
4 பேர் படுகாயம்
விபத்தில் சதீஷ்குமார், நாகலட்சுமி, சுசிலா, ஜனார்த்தனன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் குழந்தை தேஜாஸ்ரீ அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியது. இதனையடுத்து படுகாயம் ஏற்பட்ட 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.