விழுப்புரத்தில் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 1½ டன் மாம்பழங்கள் பறிமுதல்
விழுப்புரத்தில் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 1½ டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,
முக்கனிகளில் ஒன்றான மாம்பழ சீசன் தற்போது தொடங்கி உள்ளது. இதையொட்டி மாம்பழ விற்பனை அதிகரித்து வரும் வேளையில் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், விழுப்புரம் நகரில் மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஸ்டாலின் ராஜரத்தினம், இளங்கோவன், பத்மநாபன், அன்புபழனி, கதிரவன், மோகன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை பாகர்ஷா வீதி, எம்.ஜி.சாலை, கிழக்கு புதுச்சேரி சாலை ஆகிய இடங்களில் உள்ள மாம்பழ குடோன்கள் மற்றும் பழ விற்பனை கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் அழுகிய நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் என சுமார் 1½ டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதனை பணியாளர்கள் உதவியுடன் நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர்.
மேலும் நகரில் மொத்தம் 15 கடைகள் மற்றும் 5 குடோன்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 10 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் 5 கடைகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் செயற்கையாக மாங்காய்களை பழுக்க வைக்கக்கூடாது எனவும், இயற்கையான முறைகளை பின்பற்றி பழுக்க வைக்கவும் கடை உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் எனவும், ரசாயன கல் வைத்து செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.