நிலத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

நிலத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

Update: 2022-05-09 16:55 GMT
திருப்பூர்:
நெடுஞ்சாலை திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று மடத்துக்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
நிலத்துக்கு இழப்பீடு
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மடத்துக்குளம் அக்ரஹாரம் கண்ணாடிப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்கு எங்கள் பகுதியை சேர்ந்த 28 பேரின் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்துக்கான இழப்பீடு தொகை எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வருவாய் அதிகாரிக்கு (நிலமெடுப்பு) மனு கொடுத்தோம். எங்கள் இடம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என கூறி இழப்பீடு வழங்க மறுத்து வருகிறார். ஆனால் வருவாய் ஆவணங்களில் அவ்வாறு இல்லை. எங்களின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உரிய இழப்பீட்டுத்தொகையை பெற்றுக்கொடுத்து உதவ வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
மலைவாழ் மக்களுக்கு சாலைவசதி
தளி பேரூராட்சி துணை தலைவர் செல்வம் மற்றும் மலைவாழ் மக்கள் அளித்த மனுவில், ‘திருமூர்த்தி மலை தார்சாலை முதல் குருமலை வரை வன உரிமை சட்டப்படி சாலை அமைக்க தளி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உடுமலை ஆர்.டி.ஓ., தாசில்தார், மாவட்ட வன அதிகாரி உள்ளிட்டவர்களுக்கு தீர்மானம் நகல் வழங்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளில் மலைவாழ் மக்கள் மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாதவர்களை உரிய நேரத்தில் கொண்டு செல்ல முடியாமல் 30-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். திருமூர்த்தி மலை முதல் குருமலை வரை வன உரிமை சட்டப்படி சாலை அமைத்தால் குருமலை, மேல்குருமலை, பூச்சுக்கொட்டாம்பாறை, குளிப்பட்டி, மாவடைப்பு, காட்டுப்பட்டி வன குடியிருப்பு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மலைவாழ் மக்கள் காலம்காலமாக பயன்படுத்தி வரும் நடைபாதையில் கருஞ்சோலை வழியாக சாலை அமைப்பதற்கு வருவாய்த்துறை மூலமாக நில அளவை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்