ஒரே சாதிசான்றிதழ் வழங்க வேண்டும்

29 பட்டப்பெயர்களில் வாழும் முத்தரையர்கள் அனைவருக்கும் ஒரே சாதி சான்று வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.;

Update: 2022-05-09 16:50 GMT
வேலூர்

29 பட்டப்பெயர்களில் வாழும் முத்தரையர்கள் அனைவருக்கும் ஒரே சாதி சான்று வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு முத்தரையர் சங்க மாவட்ட தலைவர் ஏகாம்பரம், பொருளாளர் மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பெரும்பிடுகு முத்தரையர் சிலை

தமிழகத்தில் 29 பட்டப்பெயர்களில் வாழ்ந்து வரும் முத்தரையர் அனைவருக்கும் ஒரே சாதிச்சான்று, ஒரேசலுகை வழங்க வேண்டும். இதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முத்தரையர்களுக்கு உரிய பங்கீடு வழங்கி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும்.

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வேலூரில் நிறுவ வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பேரணாம்பட்டு அருகே உள்ள டி.டி.மோட்டூர் சிந்த கணவாய் கிராமத்தை சேர்ந்த மீனாட்சி (வயது 29) அளித்துள்ள மனுவில், எனக்கு 5 குழந்தைகள் உள்ளனர். என்னுடைய கணவர் 2-வதாக வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு என்னை விரட்டி அடித்து விட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

மதுபோதையில் ராணுவவீரர்

பொதுமக்களிடம் கலெக்டர் மனு பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் மது குடித்துவிட்டு போதையில் மனு கொடுக்க வந்திருந்தார். அவர் கலெக்டர் அருகே சென்றதும் மனுவை கொடுக்காமல் செல்போனை பார்த்துக்கொண்டு போதையில் தள்ளாடியபடி நின்றதாக கூறப்படுகிறது. இதனை நோட்டமிட்ட கலெக்டர் மனு எங்கே என்று கேட்டார். அப்போது முன்னாள் ராணுவவீரர் அலட்சியமாக பதில் கூறி உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். முன்னாள் ராணுவ வீரரை குறைதீர்வு கூட்டம் நடந்த அரங்கத்தில் இருந்து போலீசார் வெளியே அழைத்துச் சென்றனர். அப்போது அவர் அரங்கத்தின் முன்பு கீழே விழுந்தார். மேலும் அவர் போதையில் இருந்ததால் அவர் மீது போலீசார் தண்ணீரை ஊற்றி, அவர் வந்த காரில் அனுப்பி வைத்தனர். அவருடன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் வந்திருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் மதுபோதையில் இருப்பவர்களை எந்த காரணத்தைக் கொண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரக்கூடாது என அந்த கார் டிரைவருக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்