தாராபுரம் அருகே பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி நிலம் மீட்பு

தாராபுரம் அருகே பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான ரூ.25 கோடி நிலம் மீட்கப்பட்டது.

Update: 2022-05-09 16:34 GMT
பழனி:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகா பெரியகுமாரபாளையம் பகுதியில் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமாக 60 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமாா் ரூ.25 கோடி ஆகும். இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்ததோடு, தங்களுக்கு சொந்தமானது என கோரி கோவை மாவட்ட கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். சுமார் 40 ஆண்டுகள் நடந்த இந்த வழக்கில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பெரியகுமாரபாளையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட நிலம் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நடராஜன், திண்டுக்கல் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, பழனி முருகன் கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், ஆய்வாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள், போலீசார் இன்று பெரியகுமாரபாளையம் பகுதிக்கு சென்றனர். பின்னர் கோவில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதைத்தொடர்ந்து அந்த இடம் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானது, எனவே ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்ற தகவல் பலகையை அவர்கள் வைத்தனர். 

மேலும் செய்திகள்