தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.
திண்டுக்கல் :
‘தினத்தந்தி’க்கு நன்றி
பண்ணைக்காடு அருகே ஊத்து பகுதியில் வாகனம் மோதியதில் முறிந்து விழுந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று ‘தினத்தந்தி’ புகார் பெட்டி வாட்ஸ்-அப் எண்ணில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் வந்தது. இதையடுத்து ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் அதுகுறித்து செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது அந்த மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் நட்டு வைக்கப்பட்டது. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க உதவிய ‘தினத்தந்தி’க்கு நன்றி.
-தமிழ்ச்செல்வன், கெங்குவார்பட்டி.
பள்ளத்தால் விபத்து அபாயம்
பழனி லட்சுமிபுரம் பகுதியில் குடிநீர் குழாய் இணைப்புக்காக ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இந்த பள்ளங்கள் தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் இன்னும் மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகராஜன், பழனி.
பாதியில் நின்ற கட்டுமான பணி
ஆண்டிப்பட்டி தாலுகா மரிக்குண்டு ஊராட்சி எம்.சுப்புலாபுரத்தில் புதிதாக சத்துணவு கூடம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. சத்துணவு கூடத்துக்கான கட்டிட சுவர்கள் கட்டப்பட்ட நிலையில் திடீரென பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் சத்துணவு கூடத்துக்கு வரும் குழந்தைகளை மரத்தடியில் அமர வைக்கும் நிலை உள்ளது. கட்டிட பணிகளை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நந்தகோபால், எம்.சுப்புலாபுரம்.
சேதமடைந்த சாலை
திண்டுக்கல் அருகே கம்பிளியம்பட்டியில் இருந்து மார்க்கம்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெரால்டு, வக்கம்பட்டி.