போதிய விலை கிடைக்காததால் வெங்காயத்தை சாலையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
போதிய விலை கிடைக்காததால் வெங்காயத்தை சாலையில் கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கன்னிவாடி:
ரெட்டியார்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது அவை விளைந்து அறுவடை நடைபெற்று வருகிறது. ஆனால் வரத்து அதிகரிப்பு காரணமாக வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் இன்று ரெட்டியார்சத்திரத்தில், திண்டுக்கல்-பழனி சாலைக்கு வந்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த வெங்காயத்தை சாலையில் கொட்டி திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் தங்கசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெருமாள், ஒன்றிய செயலாளர் தயாளன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
வெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்கவில்லை என்றும், வெங்காயத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும், வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.