தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
உடுமலை,
உடுமலையில், அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
தமிழக சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன் பேசும்போது, பழைய ஓய்வூதிய திட்டம் சாத்தியமில்லை என்று பேசியதைக்கண்டித்தும், முதல்-அமைச்சர் தேர்தல் கால வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு முடிவு செய்தது.
இந்த முடிவின்படி தமிழ் நாடு அரசு ஊழியர்சங்க உடுமலை வட்டக்கிளையின் சார்பில், உடுமலை பழனி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை வட்டக்கிளை செயலாளர் கே.வெங்கிடுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எம்.பாலசுப்பிரமணியம் கண்டன உரையாற்றினார்.உடுமலை வட்டக்கிளை பொருளாளர் வி.பரமேஸ்வரன் நன்றி கூறினார்.
நிர்வாகிகள்
இதேபோன்று உடுமலை வட்டாரக்கல்வி அலுவலகம், வேளாண்மைத்துறை அலுவலகம், அரசு தொழிற்பயிற்சிநிலையம், அரசுகலைக்கல்லூரி, ஆர்.டி.ஓ. அலுவலகம், நகராட்சி அலுவலகம் ஆகியவற்றின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் துணைத்தலைவர் செல்வக்குமார், செயற்குழு உறுப்பினர்செல்லமுத்து, தணிக்கையாளர் கருப்புசாமி, மாநில செயலாளர் ஏ.அம்சராஜ் மற்றும் வட்டக்கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் கிளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக நேற்று 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேளாண்மை துறை அலுவலகம் முன்பும், அரசு மருத்துவமனை வளாகத்திலும், மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன்பும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட கிளை தலைவர் மதன்குமார் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசு ஊழியர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என தி.மு.க.வினர் தேர்தல் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளனர். இதை மிகவும் கண்டிக்கிறோம். இது அரசு பணியில் உள்ளவர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
இதனால் பலரும் சிரமம் அடைவார்கள். வயது முதிர்ந்த காலத்தில் அவர்களுக்கு பிடிப்பாக உள்ளது ஓய்வு ஊதியம் மட்டுமே. இதனால் அரசு மறுபரிசீலனை செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என அறிவிக்க வேண்டும் என கோஷமிட்டனர். கிளை செயலாளர் ரங்கநாதன். அனைத்து துறை ஊழியர் சங்க பொறுப்பாளர் சவுந்தர்ராஜன், மாவட்ட பொறுப்பாளர் முருகசாமி மற்றும் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்