உக்தவேதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
குத்தாலம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ் வாய்ந்த பெரிய கோவில் எனப்படும் உக்தவேதீஸ்வரர் கோவில் உள்ளது. சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும், சுந்தரர் தோல் நோய் நீக்கிய தலமாகவும் விளங்கும் இந்த கோவிலின் குடமுழுக்கு 62 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் நடந்தது.
அதனைத்தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடைக்கு மணக்கோலத்தில் அம்மையும், உக்தவேதீஸ்வரரும் எழுந்தருளினர். பின்னர், தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாஹூதியுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பக்தர்கள்
தொடர்ந்து மாலை மாற்றுதல், மணமகன் கையில் காப்பு கட்டுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்று, மாங்கல்ய தாரண நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தை மகேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.