மின்சார ரெயில் சேவை பாதிப்பு- பயணிகள் கடும் அவதி

உயரழுத்த மின் கம்பி அறுந்ததால், நேற்று மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2022-05-09 15:18 GMT
மின்சார ரெயில் சேவை பாதிப்பு
 மும்பை, 
   உயரழுத்த மின் கம்பி அறுந்ததால், இன்று மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
மின் கம்பி அறுந்தது
  மும்பையில் மின்சார ரெயில் சேவை மக்களின் உயிர் நாடியாக உள்ளது. இங்கு தினந்தோறும் 75 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், இன்று அதிகாலை 5.50 மணிக்கு மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் தகிசர்- போரிவிலி இடையே உயரழுத்த மின் கம்பி (ஓவர்ஹெட் வயர்) அறுந்து விழுந்தது.
 இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. குறிப்பாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.
பயணிகள் பரிதவிப்பு
  இதனால் நீண்ட நேரமாக மின்சார ரெயிலில் இருந்த பயணிகள், பொறுமையிழந்து நடந்தே அருகில் உள்ள ரெயில் நிலையங்களுக்கு சென்றனர். இதற்கிடையே, காலை 7.23 மணிக்கு அந்த வழித்தடத்தில் உயரழுத்த மின் கம்பி சரி செய்யப்பட்டது.
  எனினும், இன்று காலை நேரத்தில் மேற்கு ரெயில்வே மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பால்கர், மும்பை மேற்கு புறநகரில் இருந்து நகர் பகுதிக்கு வேலைக்கு வந்த லட்சக்கணக்கான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்