வெப்3 நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில் உற்பத்தி துறையில் கோவை முன்னோடியாக திகழ வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்
வெப்3 நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில் உற்பத்தி துறையில் கோவை முன்னோடியாக திகழ வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்
கோவை
வெப்-3 நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தொழில் உற்பத்தி துறையில் கோவை முன்னோடியாக திகழ வேண்டும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்தார்.
விருது வழங்கும் விழா
கோவையில் உள்ள ஸ்டார்ட் -அப் அகாடமி சார்பில், தொழில் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
இதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசும் போது கூறியதாவது
இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின்னர், விவசாயத்தை மட்டும் நம்பி இருக்க கூடாது என்பதற்காக தொழில் உற்பத்தியை மேம் படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தொழில் துறையை ஒழுங்குபடுத்த மத்திய அரசு தேவையான கட்டுப் பாட்டுகளை மேற்கொண்டு வந்தது.
முன்பெல்லாம் உள்ளூர் சந்தையில் தேவைக்கு இருப்பதுபோக மீதியை ஏற்றுமதி செய்யலாம். நிறைய உற்பத்தி செய்ய தொழில் நிறுவனங்கள் விரும்பினாலும் அரசு அதற்கு விடவில்லை.
அளவோடு உற்பத்தி செய்ய மட்டுமே அனுமதி இருந்தது. பெரிய பெரிய தொழில் நிறுவனங்கள் அளவோடு உற்பத்தி செய்ய கட்டுப்பாடு இருந்ததால் அவற்றுக்கு சுதந்திரம் இல்லை. சோசலிசம் பாணியில் இருந்தது.
தற்போது நமது உற்பத்தி முறைகளில் மாற்றம் ஏற்பட்டது. நாட்டில் தொழிலோ, உற்பத்தியோ, விவசாயமோ ஆயிரம் ஆண்டுகளாக செய்து கொண்டுதான் இருந்தோம்.
இடையில் இயற்கை திறமைகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 1991-ல் பொருளாதார பிரச்சினை ஏற்பட்டபோது, கட்டுப்பாட்டுகளை களைந்து போட்டிகளை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை காங்கிரஸ் தான் சமாளித்ததாக கூறியது.
கொள்கை மாறுதல்
பிரதமர் மோடிதான் கொள்கை மாறுதல்களை செய்தார். இதனால் 2021 பட்ஜெட்டில் பொது துறை நிறுவனங்களுக்கு என தனியாக இடம் கிடையாது என அறிவிக்கப்பட்டது. நாட்டு நலனுக்காக சில இடங்களில் பொது துறை நிறுவனங்கள் இருக்கும்.
எல்லா இடங்களிலும் தனியார் துறை அனுமதிக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு எங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு தேவை யானதை தொலை நோக்கு பார்வையுடன் இந்த அரசு செய்து வருகின்றது.
விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி துறை உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு தொடர்பானதில் கூட தனியார்துறையை அனுமதிக்கும் நிலை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுதொழில்
சின்ன சின்ன தொழில்கள் நாட்டின் முதுகெலும்பாக இருக்கிறது. சிறுகுறு தொழில்தான் முக்கிய பலம். கோவை சிறு, குறு தொழில் களில் சிறந்து விளங்கி வருகின்றன.
இன்றைய இளைஞர்கள் இன்னும் திறமையாக மதிப்பு கூட்டப்பட்டதாக பண்ணலாம். இதற்கு தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். பிரதமர் மோடி 2015-ம் ஆண்டு முதல் ஸ்டார்ட்அப்புக்கு பேரூதவி செய்ய தொடங்கினார்.
பெங்களூரு, குர்கான், ஐதராபாத் போன்ற நகரங்களைவிட கோவை ஸ்டார்ட்அப்பில் முன்னோடியாக திகழ வேண்டும். வெப்- 3-க்கு (நவீன தொழில்நுட்பம்) தற்போது வந்துவிட்டோம்.
வெப்-3 நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒவ்வொரு துறையையும் வளச்சி அடைய செய்யலாம். இதில் கோவைநகரம் முன்னோடியாக திகழ வேண்டும்.
இதில் தனித்துவத்தை கோவை பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தற்போது பசுமை சக்தியை பயன்படுத்துவதில் உலகத்தில் தற்போது சாதனை படைத்து வருகிறது.
தண்ணீர் பற்றாக்குறையை சமாளிப்பதில் புதிய தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இன்னும் நாம் சாதனைபடைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணா மலை, பாரதீய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், எல்.எம்.டபிள்யு நிறுவன சேர்மன் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, ஸ்டார்ட் அப் அகாடமி தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஜவுளித்துறை பிரச்சினை
பின்னர் ஜவுளித்துறையினர் நடத்திய பாராட்டு விழா கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பேசும் போது கூறியதாவது
ஐவுளி தொழில் துறையினர் ஒரே குரலாக பேசுவதில்லை. கோவை, சூரத் பகுதிகளில் ஜவுளித்தொழில் அதிகமாக இருக்கிறது.
ஜவுளி தொழில் துறையினர் கோரிக்கை வைக்கும் போதே அதற்கான தீர்வுகளையும் சொல்லுங்கள், அப்போதுதான் துறை அதிகாரிகளிடம் பேசி சரி செய்ய முடியும்.
பருத்தி இறக்குமதி வரியை குறைக்க கேட்டீர்கள், குறைத்தாகி விட்டது. ஆனால் பருத்தி இறக்குமதி செய்ய 3 மாதம் ஆகிறது.
பதுக்கலை வெளியில் கொண்டு வர நடவடிக்கை தேவை என்கின்றீர்கள். வியாபாரிகள் பருத்தியை பதுக்கி வைத்திருந்தால், மாநில அரசால் நடவடிக்கை எடுக்க முடியும்.
வேலை வாய்ப்பு
தமிழகத்தில் பருத்தி, நூல் வியாபாரம் செய்பவர்கள் பருத்தியை பதுக்கி வைப்பது இல்லையா?. காட்டன் கார்ப்பரேசன் இந்தியா மூலம் நேரடியாக பருத்தியை மில்லுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? என்பதை ஆராய்ந்து பார்க்கப்படும்.
தொழில்கள் மூலமாக நாடு வளரும், வேலை வாய்ப்பு ஏற்படும் என்பதால் தேவையான உதவிகளை செய்ய பிரதமர் மோடி அறிவுறுத்தி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.