மலைப்பாதையில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானலுக்கு வரும் மலைப்பாதையில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Update: 2022-05-09 14:50 GMT
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் சீசன் தொடங்கியதையடுத்து நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். 
 இந்நிலையில் கொடைக்கானலுக்கு வரும் வத்தலக்குண்டு மற்றும் பழனி மலைப்பாதைகளில் தற்போது நெடுஞ்சாலை துறையினர் பல்வேறு இடங்களில் பாலம் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொக்லைன் எந்திரம் உள்ளிட்ட வாகனங்களை கொண்டு பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் சாலைகள் குறுகலாகிவிட்டன. மலைப்பாதையில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல இடம் உள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்கின்றன. 
இதனால்  கடந்த சில நாட்களாக கொடைக்கானலுக்கு அதிகளவில் வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஊர் திரும்பும்போது அவர்களின் வாகனங்கள் பாலம் அமைக்கப்படும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் உரிய நேரத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சீசன் தொடங்கியுள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் துரித கவனம் செலுத்தி பாலம் அமைக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும், சீசன் காலத்தில் மலைப்பாதையில் பாலம் அமைக்கும் பணிகளை தவிர்க்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே மலைப்பாதையில் ஆங்காங்கே சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்