வாகனங்களில் பலகுரல் ஒலிப்பான்கள் அகற்றம்
ராமநாதபுரத்தில் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 10 வாகனங்களில் பொருத்தப் பட்டிருந்த ஒலி மாசு ஏற்படுத்தக்கூடிய பலகுரல் ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம்,

உத்தரவு
தமிழகம் முழுவதும் வாகனங்களில் ஒலி மாசு ஏற்படுத்த கூடிய பல குரல் ஒலிப்பான்கள் பொருத்துவதை அகற்ற வேண்டும் என்று சென்னை போக்குவரத்து ஆணையர் நடராஜன் உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது தலைமையில் போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடை பெற்ற இந்த சோதனையில் மொத்தம் 50-க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் 10 வாகனங் களில் ஒலி மாசு ஏற்படுத்தக்கூடிய பல குரல் ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு அவை உடனடியாக அகற்றப்பட்டன.
அபராதம்
மேலும் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இந்த சோதனை நடத்தப்படும் என்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக தங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டு உள்ள இதுபோன்ற பல குரல் ஒலிப்பான்களை அகற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து அலுவலர் சேக் முகமது எச்சரித்துள்ளார்.