பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

Update: 2022-05-09 13:47 GMT
கூடலூர்

முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு நாளை(செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

வனவிலங்குகள் கணக்கெடுப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. ஒவ்வொரு கால நிலைகளுக்கு ஏற்ப வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்த கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதை கருத்தில் கொண்டு பருவமழைக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

பயிற்சி

இந்த நிலையில் வருகிற ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பருவமழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி முதுமலை புலிகள் காப்பகத்தின் (உள் மண்டலம்) தெப்பக்காடு, கார்குடி, முதுமலை, நெலாக்கோட்டை, மசினகுடி சரக வனப்பகுதியில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி தெப்பக்காட்டில் உள்ள வன உயிரின மேலாண்மை மையத்தின் வன ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

கழுகுகள் கணக்கெடுப்பு

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
வன ஊழியர்களுக்கு கணக்கெடுப்பின்போது மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் நேரடியாக காணுதல், மறைமுக தடயங்கள், விலங்குகளின் எச்சங்கள், நேர்கோட்டுப்பாதையில் தாவர உண்ணிகளை கணக்கெடுத்தல், பிணந்தின்னிக்கழுகுகளை கணக்கெடுத்தல் உள்ளிட்ட பணிகளில் வன ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

பின்னர் விலங்குகளின் வாழ்விட வகை பயன்பாடு மற்றும் மதிப்பீடு குறித்து அறிக்கை தயார் செய்யப்படும். அதன்பின்னர் புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணி நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்