கூடலூர் வழியாக குருவாயூருக்கு பஸ் சேவை

சுல்தான்பத்தேரியில் இருந்து கூடலூர் வழியாக குருவாயூருக்கு பஸ் ேசவை தொடங்கி உள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2022-05-09 13:47 GMT
கூடலூர்

சுல்தான்பத்தேரியில் இருந்து கூடலூர் வழியாக குருவாயூருக்கு பஸ் ேசவை தொடங்கி உள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

குருவாயூருக்கு புதிய பஸ்

கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் இருந்து கூடலூருக்கு தமிழக, கேரள பஸ்கள் இயக்கப்படுகிறது. இருப்பினும் முக்கிய ஊர்களுக்கு செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாமல் இருந்து வருகிறது. குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் இருந்து கூடலூர் வழியாக ஏர்வாடி தர்கா மற்றும் ராமேஸ்வரத்துக்கு அரசு பஸ் இயக்க வேண்டும் என்று பொது மக்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

இதேபோல் கூடலூரில் இருந்து மேட்டுப்பாளையம், திருப்பூர் வழியாக மதுரைக்கு பஸ் இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பஸ் இயக்கப்படவில்லை. மேலும் கூடலூரில் இருந்து பாலக்காடு, குருவாயூர் உள்ளிட்ட இடங்களுக்கு பஸ் வசதி கிடையாது. இதை கருத்தில் கொண்டு நேற்று முதல் வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரியில் இருந்து பிதர்காடு, நெலாக்கோட்டை, கூடலூர், நாடுகாணி வழியாக குருவாயூருக்கு புதிய வழித்தடத்தில் கேரள பஸ் இயக்கப்படுகிறது.

மாலை அணிவித்து மகிழ்ச்சி

இதன் காரணமாக பாட்டவயல் முதல் நெலாக்கோட்டை, தேவர்சோலை உள்ளிட்ட இடங்களில் புதிய வழித்தடத்தில் இயக்கும் கேரள பஸ்சுக்கு பொதுமக்கள், வியாபாரிகள் சார்பில் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்படுகிறது. நேற்று நெலாக்கோட்டை பஜாரில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கபீர், பாக்கியராஜ், வாபுட்டி உள்பட வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.  

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அவர்கள் தமிழகத்தில் உள்ள ஏர்வாடி தர்காவிற்கு அதிகளவு சென்று வருகின்றனர். இதனால் கூடலூரில் இருந்து ஏர்வாடிக்கு பஸ் இயக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது குருவாயூருக்கு பஸ் இயக்குவதால் இப்பகுதி மக்கள் பயன் பெறுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்