15 பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்

தஞ்சையில் அதிக ஒலி எழுப்பும் வகையில் 15 பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்

Update: 2022-05-09 05:14 GMT
தஞ்சாவூர்
தஞ்சை மாநகருக்குள் இயக்கப்படும் பஸ்களில் பலவித சத்தத்துடன் அதிக ஒலி எழுப்பும் வகையில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்படி, போக்குவரத்து துணை ஆணையர் கருப்புசாமி அறிவுறுத்தலின்பேரில், தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் தஞ்சை புதிய பஸ் நிலையம் மற்றும் பட்டுகோட்டை புறவழிச்சாலை பகுதியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
15 பஸ்களில் காற்று ஒலிப்பான்கள் அகற்றம்
அப்போது அந்த வழியாக வந்த மினிபஸ் மற்றும் தனியார் பஸ்களில் பலவித சத்தத்துடன் அதிக ஒலி எழுப்பும் வகையில் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த காற்று ஒலிப்பான்களை அதிகாரிகள் அகற்றினர். 15-க்கும் மேற்பட்ட பஸ்களில் இருந்து காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.
மேலும் இதுபோன்று தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்