லாரியுடன் டிரைவரை கடத்திய கேரள கும்பல் கைது

சேலம் அருகே லாரியுடன் டிரைவரை கடத்திய கேரள கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-05-09 05:14 GMT
சேலம்:-
சேலம் அருகே லாரியுடன் டிரைவரை கடத்திய கேரள கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிரைவர் கடத்தல்
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து கடந்த மாதம் 13-ந் தேதி மாங்காய் லோடு ஏற்றி கொண்டு ஒரு லாரி பெங்களூருவுக்கு சென்றது. அந்த லாரியை திருச்சூரை சேர்ந்த சமீர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அங்கு மாங்காய் லோடை இறக்கி வைத்துவிட்டு மறுநாள் பெங்களூருவில் இருந்து கேரளா நோக்கி லாரி சென்றது.
சேலம் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் அதை பின் தொடர்ந்து சொகுசு காரில் வந்த ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் லாரியுடன் டிரைவர் சமீரையும் கடத்தி சென்றனர். இது குறித்து லாரி உரிமையாளர், சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், கேரளாவை சேர்ந்த ஒரு கும்பல் லாரியுடன் டிரைவரை கடத்தி சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
3 பேர் கைது
இதனையடுத்து திருச்சூர் விரைந்த போலீசார் லாரி டிரைவரை கடத்திய சிரிஜான் (வயது 39), பிஜிஸ் பாஸ்கரன் அனி (39), உன்னி கண்ணன் என்கிற நிகில் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தப்பட்ட டிரைவர், லாரி குறித்தும், இந்த கடத்தலுக்கு வேறு யாரேனும் உடந்தையாக உள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்