இணையவழி குற்றங்களை தடுப்பது எப்படி?

இணையவழி குற்றங்களை தடுப்பது எப்படி? என்பது குறித்து சேலம் மாநகர ேபாலீசாருக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

Update: 2022-05-09 05:14 GMT
அன்னதானப்பட்டி:-
இணையவழி குற்றங்களை தடுப்பது எப்படி? என்பது குறித்து சேலம் மாநகர ேபாலீசாருக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
விழிப்புணர்வு கூட்டம்
சேலம் டவுன், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களிலும், ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள், போலீசாருக்கான இணையவழி குற்றங்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், இணையவழி குற்றங்கள் எவ்வாறு நடக்கிறது. பொதுமக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள்? அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றி விளக்கி கூறப்பட்டது. மேலும், ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பணம் மற்றும் உயிரிழப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது.
விழிப்புணர்வு
கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்தும்போது, கைபேசியில் உள்ள படங்கள், தகவல்கள் முழுவதும் திருடப்படும் எனவும், அவ்வகை செயலிகள் மூலம் கடன் பெற்று அதனை கட்டிய பின்னரும் மேலும் பணம் கட்ட வேண்டும் எனக்கூறி மிரட்டப்படுவதாகவும், இதுபோன்ற போலி ஆப்களில் நுழைந்து ஏமாற வேண்டாம் எனவும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் கூறுகையில், இணையவழியில் பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் பண இழப்பை தடுக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு புகார் அளிப்பவர்கள் வங்கி விவரம், பணப்பரிமாற்றம் நடைபெற்ற நாள், நேரம் மற்றும் ஏமாற்றப்பட்டவரின் வங்கி கணக்கு ஆகியவற்றுடன் www.cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் சென்று புகார் அளிக்கலாம் என்றார்.

மேலும் செய்திகள்