‘ஷவர்மா’ உணவை தடை செய்வது குறித்து ஆய்வு

உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் ‘ஷவர்மா’ உணவை தடை செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று சேலத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Update: 2022-05-09 05:14 GMT
சேலம்:-
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் ‘ஷவர்மா’ உணவை தடை செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்று சேலத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தடுப்பூசி சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் 29-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. சேலம் அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த தடுப்பூசி முகாமை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை விரைவுப்படுத்தும் நோக்கத்தோடு இன்றைய தினம் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் 1.50 கோடி பேரும், முதல் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் 50 லட்சம் பேரும் உள்ளனர்.
92.89 சதவீதம் பேர்
இந்தியாவிலேயே ஒரே நாளில் 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவது இதுவே முதல்முறை ஆகும். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92.89 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 79.39 சதவீதமாக இருக்கிறது.
சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தபோது அங்கு போதுமான மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ஏற்காட்டில் பிணவறை செயல்படவில்லை. இதனால் ஏற்காடு மலையில் இறப்போரின் உடலை சேலம் கொண்டு வந்து பிரேத பரிசோதனை செய்து மீண்டும் எடுத்து செல்வதற்கு 2 நாட்கள் ஆகிறது.
பிரேத பரிசோதனை கூடம்
இதேபோல் உடல் உறுப்பு தானம் செய்ய விரும்புவோரின் உறுப்புகளும் பாதுகாப்பான முறையில் கொண்டு வந்து பயன்படுத்த முடியவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் 8 ஆண்டுகளாக ஏற்காடு ஆஸ்பத்திரியில் பிணவறை அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். 
ஆனால் தற்போது அங்கு ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் பிரேத பரிசோதனை கூடம் கட்டிடம் கட்டுவதற்கும், தேவையான உபகரணங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஒரு மாதத்திற்குள் தொடங்கப்படும்.
சேலத்தில் ஆய்வகம்
சேலம் மாவட்டத்தில் ரூ.1 கோடியில் ஒருங்கிணைந்த மருத்துவ ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. அம்மாப்பேட்டை நகர்ப்புற மருத்துவமனைக்கு ரூ.1.46 கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது. சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இதய பிரிவுக்கான கருவி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்காக ரூ.4 கோடி செலவில் கேத்லேப் கருவி அமைக்கப்பட உள்ளது.
வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.50 லட்சத்தில் விபத்து சிகிச்சை பிரிவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள 7 வட்டாரங்களில் ரூ.5.66 கோடி மதிப்பீட்டில் பொது சுகாதார மையங்கள் கட்டப்பட உள்ளன.
‘ஷவர்மா’
தமிழ்நாட்டில் 316 துணை சுகாதார நிலையங்கள் ரூ.102.61 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதன்படி சேலம் மாவட்டத்தில் 42 துணை சுகாதார நிலையங்கள் ரூ.13.63 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. முதல்-அமைச்சரின் அறிவிப்பின்படி சேலம் மாநகராட்சி பகுதிகளில் 32 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்களும், நகராட்சி பகுதிகளில் 6 இடங்களிலும் நகர்ப்புற நலவாழ்வு மையங்களும் அமைய இருக்கிறது.
சமீபத்தில் கேரளாவில் ‘ஷவர்மா’ உணவு சாப்பிட்ட மாணவி ஒருவர் இறந்துள்ளார். ‘ஷவர்மா’  என்பது மேலை நாட்டு உணவு. அங்குள்ள தட்ப வெப்பநிலைக்கு ‘ஷவர்மா’ உகந்ததாக இருக்கும். ஆனால் நமது நாட்டின் தட்ப வெப்பநிலைக்கு விரைவில் கெட்டுப்போகும். ‘ஷவர்மா’வை பதப்படுத்த முடியுமா? என்று தெரியாமல் வியாபார நோக்கத்தோடு சிலர் அதை விற்பனை செய்கிறார்கள்.
தடை
எனவே, பொதுமக்கள் ‘ஷவர்மா’ போன்ற துரித உணவுகளை தவிர்த்து நமது பாரம்பரிய உணவு முறைகளை பின்பற்றி தங்களது உடல்நலனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். சுமார் 1,000 ‘ஷவர்மா’  உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். விதிகளை மீறிய சில ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘ஷவர்மா’ உணவை தடை செய்வது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஆய்வின்போது, சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி., வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேலம் மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதா தேவி, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், அரசு ஆஸ்பத்திரி டீன் வள்ளி சத்தியமூர்த்தி, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் நளினி, ஜெமினி, மண்டல குழு தலைவர் உமாராணி உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்