மாவட்டத்தில் பல இடங்களில் சூறாவளிக்காற்றுடன் மழை: சென்னிமலை முருகன் கோவிலில் தகர கொட்டகை பறந்தது- ஆயிரக்கணக்கான வாைழகள் சாய்ந்தன

மாவட்டத்தில் பல இடங்களில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னிமலை முருகன் கோவிலில் தகர கொட்டகை பறந்து விழுந்தது. மேலும் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.

Update: 2022-05-08 22:00 GMT
ஈரோடு
மாவட்டத்தில் பல இடங்களில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னிமலை முருகன் கோவிலில் தகர கொட்டகை பறந்து விழுந்தது. மேலும் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன. 
சூறாவளிக்காற்றுடன் மழை
சென்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 மணி அளவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சென்னிமலை அருகே உள்ள பசுவபட்டி ஊராட்சி கந்தசாமிபாளையத்தை சேர்ந்த விவசாயி முத்துக்குமார் (வயது 50) என்பவரின் தோட்டத்தில் பயிரிட்டிருந்த சுமார் ஆயிரக்கணக்கான நேந்திரம் ரக வாழைகள் முறிந்து விழுந்தது.
சென்னிமலை அருகே எல்லைக்குமாரபாளையத்தை சேர்ந்த கந்தசாமி (45) என்பவர் தனது வீட்டில் 2 விசைத்தறிகளை போட்டு நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் விசைத்தறி குடோனுக்காக அமைக்கப்பட்டிருந்த முன்புற கொட்டகை முழுமையாக பறந்தது. மேலும் வீட்டு ஓடுகளும் நொறுங்கி விழுந்தது. சம்பவம் நடந்தபோது கந்தசாமி மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கோவிலுக்கு சென்று விட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
கோவில் கொட்டகை பறந்தது
சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் கோவிலுக்கு முன்புறம் மற்றும் இடது புறத்தில் தகர கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. பலத்த காற்று வீசியதால் இந்த கொட்டகைகள் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்து நொறுங்கியது.
சென்னிமலை அருகே உள்ள சொக்கநாதபாளையம் செங்காளிகாட்டு தோட்டத்தை சேர்ந்தவர் விவசாயி செந்தில். இவருடைய தோட்டத்தில் இருந்த தென்னை மரம் பலத்த காற்றால் முறிந்து மின்கம்பி மீது விழுந்தது. இதனால் அங்கிருந்த மின் கம்பம் முறிந்து விழுந்தது. இதன் காரணமாக ரோட்டின் குறுக்கே மின்கம்பிகள் கிடந்ததால் நேற்று அந்த வழியே செல்லும் அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டது.
தென்னைமரங்கள் முறிந்தது
மேலும் இதே பகுதியில் உள்ள கட்டையக்காடு, ஏரிக்காடு ஆகிய இடங்களிலும் தென்னை மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. ஒரே பகுதியில் 5 மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததால் அந்த பகுதியில் விடிய, விடிய மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சொக்கநாதபாளையம் எளந்தபழக்காடு என்ற இடத்தில் சாமிதுரை என்ற விவசாயி சமீபத்தில் கொட்டகை ஒன்று அமைத்திருந்தார். பலத்த காற்று காரணமாக கொட்டகையில் இருந்த தூண்கள் உடைந்ததால் கொட்டகை கீழே சரிந்து விழுந்தது. சென்னிமலை அருகே புதுவலசு-நொய்யல் ரோட்டில் மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டது.
மின்தடை
இதேபோல் அய்யம்பாளையம், அம்மாபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின் கம்பிகளும் அறுந்து விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் முன்னிலையில் ஊழியர்கள் விரைந்து சென்று மின் இணைப்புகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சென்னிமலை பகுதியில் பல இடங்களில் ஏராளமான வாழை, தென்னை மரங்களும் இந்த சூறாவளி காற்றால் முறிந்து விழுந்தது. இதனை அப்புறப்படுத்துவதற்கு தேவையான வேலையாட்கள் இல்லாததால் பல விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னிமலை அருகே முகாசிபிடாரியூர் ஊராட்சிக்கு உள்பட்ட தியாகி குமரன் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அங்கிருந்த சில வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘மழை நீர் செல்லும் ஓடை தூர் வாராமல் இருப்பதால் மழை நீர் செல்வது தடைபடுகிறது. அதனால் தியாகி குமரன் நகர் பகுதியில் செல்லும் ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
சத்தியமங்கலம்
இதேபோல் சத்தியமங்கலம் பகுதியில் குறிப்பாக செண்பகபுதூர் மற்றும் சிக்கரசம்பாளையம் ஆகிய பகுதியில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் மழை பெய்து கொண்டே இருந்தது. அதன்படி நேற்று முன்தினம் இரவு சத்தியமங்கலம் பகுதியில் 7 மணி முதல் 8 மணி வரை சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. 
தொடர் மழையால் சத்தியமங்கலத்தில் இருந்து செண்பகபுதூர் செல்லும் வழியில் உள்ள கருமாரியம்மன் கோவில் அருகே மரம் ஒன்று வேரோடு சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த வழியாக சென்ற மின்சார ஒயர்கள் அறுந்து தொங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
உடனே இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின்னரே போக்குவரத்து நிலைமை சீரானது.
அதேபோல நேற்று அதிகாலை 5 மணி அளவில் பண்ணாரி செல்லும் பாதையில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகே மரம் ஒன்று வேரோடு கீழே சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு சென்று அந்த மரத்தை முழுவதுமாக அகற்றினார்கள். அதன் பிறகு அந்த தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து வழக்கம்போல நடைபெற்றது.
பள்ளிக்கூட சுற்றுச்சுவர் சேதம்
சத்தியமங்கலம் அருகே உள்ள புதுபீர்கடவு என்ற கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தது. சூறாவளி காற்றின் காரணமாக சுற்றுச்சுவர் அருகில் இருந்த பழைய வேப்ப மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதில் சுமார் 10 அடி நீளமுள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து நாசமானது. இதுபற்றி அறிந்த அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று மரத்தை அகற்றினார்கள். இரவு நேரம் என்பதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
தாளவாடி
தாளவாடி அருகே உள்ள தலமலை, கோடிபுரம், நெய்தாளபுரம், ஒசூர், சிக்கள்ளி, பனக்கள்ளி, கெட்டவாடி, ஆசனூர், குளியாடா, திகனாரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 11 மணி வரை பலத்த மழை பெய்தது. வனப்பகுதியிலும் மழை பெய்தது. இதனால் வனப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பியது. விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
தாளவாடி, திகனாரை மற்றும் சூசைபுரம் அருகே உள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாளவாடி பகுதியில் தொடர் மழையால் 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் நிரம்பிவழிகிறது. இந்த மழை நீர் அனைத்தும் வீணாக கர்நாடகா மாநிலம் சிக்கொலா அணைக்கு சென்று சேருகிறது. எனவே தாளவாடி பகுதியில் கூடுதல் தடுப்பணைகள் கட்டி மழைநீரை சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானிசாகர்
பவானிசாகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 11 மணி வரை மழை பெய்தது. இதனால் பவானிசாகர் பகுதி வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட்டு குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே உள்ள சிறிய குட்டைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்