ஈரோடு மாவட்டத்தில் 3,194 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 194 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 194 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தொற்றின் 4-வது அலையை கட்டுப்படுத்த அரசின் உத்தரவின் பேரில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 194 மையங்களில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
இந்த முகாமானது மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், அரசு நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்களில் நடந்தது. தடுப்பூசி செலுத்தும் பணியில் 4 ஆயிரத்து 260 பணியாளர்களும், 66 அரசு வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. முகாமில் காலை முதல் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
ஈரோடு பஸ் நிலையம்
கோவிஷீல்டு, கோவாக்சின், கோர்பிவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டன. மாவட்டத்தில் நேற்று நடந்த முகாமில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் நேற்று செலுத்தப்பட்டது.
இதுவரை நடந்த மெகா தடுப்பூசி முகாம்களில் நேற்று தான் அதிகமான மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதுதவிர பொதுமக்கள் அதிகம் கூடும், ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.