ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் மழை: டிரான்ஸ்பார்மர், கம்பம் சேதத்தால் மின் தடை; பொதுமக்கள் அவதி
ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பம் சேதம் அடைந்து மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.;
ஈரோடு
ஈரோட்டில் சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. டிரான்ஸ்பார்மர் மற்றும் மின் கம்பம் சேதம் அடைந்து மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
டிரான்ஸ்பார்மர் வெடித்தது
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் ரோடுகளில் நடமாட மிகவும் சிரமப்பட்டனர். இதைத்தொடர்ந்து இரவில் வானில் மேகமூட்டம் ஏற்பட்டு, குளிர்ந்த காற்று வீசியது. இரவு 8 மணிக்கு சூறாவளிக்காற்றுடன், பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்தது.
இதன் காரணமாக ஈரோடு பஸ் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் இரவு 8 மணிக்கு வெடித்து, பஸ் நிலையம், சத்தி சாலை, வீரப்பன்சத்திரம், மூலப்பட்டறை, அகில்மேடு வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, பழனி மலை வீதி போன்ற இடங்களில் மின்தடை ஏற்பட்டது. ஈரோடு ரெயில் நிலையம் எதிரே, ஒரு மின் கம்பம் காற்றில் சாய்ந்ததால் அந்த பகுதியிலும் மின்தடை ஏற்பட்டது.
மழை அளவு
ஈரோடு மீனாட்சி சுந்தரனார் ரோடு, அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா, எஸ்.கே.சி. ரோடு, சூரம்பட்டி நால்ரோடு, பெரியவலசு உள்பட மாநகரில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரத்துக்கும் மேல் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் குட்டை போல் தேங்கி நின்றது. மேலும் சேறும், சகதியுமாக காணப்பட்டதால் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளும் சிரமப்பட்டனர்.
ஈரோட்டில் நேற்று காலை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதைத் தொடர்ந்து இரவு வானில் கருமேகங்கள் தோன்றின. இரவு 9.10 மணிக்கு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அப்போது இடி, மின்னலும் கடுமையாக இருந்தது. மழை பெய்ய ஆரம்பித்த சிறிது நேரத்தில் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பின்னர் இரவு 9.50 மணிக்கு மின் வினியோகம் செய்யப்பட்டது. இந்த மழை இரவு 10 மணி வரை பெய்தது. அதைத்தொடர்ந்தும் மழை தூறிக்கொண்டே இருந்தது. 2 -வது நாளாக நேற்றும் மழை பெய்ததால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சென்னிமலை - 42, பவானிசாகர் - 34.6, வரட்டுப்பள்ளம் - 17, ஈரோடு - 15, அம்மாபேட்டை-7, தாளவாடி - 6, பவானி - 5.4, சத்தியமங்கலம் - 4, பெருந்துறை - 2, கவுந்தப்பாடி - 1.6.