திருச்சி அரசு ஆஸ்பத்திரி சமையல் கூடத்தில் மயங்கி விழுந்த பெண் ஊழியர் சாவு
திருச்சி அரசு ஆஸ்பத்திரி சமையல் கூடத்தில் மயங்கி விழுந்த பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, வாரிசு வேலை வழங்கக்கோரி டீன் அலுவலகத்தில் ஊழியர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி,
பெண் சமையல் ஊழியர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கிளியாநல்லூர் பகுதியை சேர்ந்த மாவடியானின் மனைவி மகேஸ்வரி (வயது 41). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவருடைய கணவர் அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக பணியாற்றிய போது இறந்துவிட்டார்.
இதனால், மகேஸ்வரிக்கு வாரிசு அடிப்படையில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரியில் சமையல் கூடத்தில் பணி வழங்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அங்கு பணியாற்றி வந்தார்.
மயங்கி விழுந்து சாவு
நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பணிக்கு வந்த மகேஸ்வரி, மதியம் சமைத்த உணவுகளை நோயாளிகளுக்கு வழங்கினார். பின்னர் மாலை 4.30 மணியளவில் சமையல் கூடத்துக்கு திரும்பி வந்தார். அப்போது, சமையல் கூடத்தில் திடீரென மகேஸ்வரி மயங்கி விழுந்தார்.
அவரை சக ஊழியர்கள், அவசர சிகிச்சை பிரிவுக்கு தூக்கிச்சென்று அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, ரத்தக்கொதிப்பு காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
வாரிசு வேலை
இதுபற்றி அறிந்த சக ஊழியர்களும், மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்களும் டீன் அலுவலகத்தில் திரண்டனர். மேலும் மகேஸ்வரியின் மகன்களில் ஒருவருக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும், கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டீன் வனிதாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக டீன் தெரிவித்தார்.
பின்னர், மகேஸ்வரியின் உடலுக்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், அனைவரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். இதைத்தொடர்ந்து அவருடைய உடல் மண்ணச்சநல்லூருக்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.