கர்ப்பப்பை பிரச்சினைக்கு சிறப்பு சிகிச்சை

கோட்டார் அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாக டீன் கிளாரன்ஸ் டேவி கூறியுள்ளார்.

Update: 2022-05-08 21:21 GMT
நாகர்கோவில்:
கோட்டார் அரசு ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சினைக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாக டீன் கிளாரன்ஸ் டேவி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கர்ப்பப்பை பிரச்சினை
பெண்களுக்கு நோய்கள் பெருகி வருகின்றன. அதிலும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் மிகவும் பெருகி வரும் நிலையில் “என்டோமெட்ரியோஸிஸ்” (கர்ப்பப்பை அகப்படல் நோய்) என்னும் நோய் தற்போது அதிக அளவில் காணப்படுகிறது. 
கர்ப்பப்பையின் உட்புறத்தில் சுற்றியிருக்கும் திசுவானது கருமுட்டைக் குழாய் சினைப்பை அல்லது சில தொலைதூர உறுப்புகளான இடுப்புப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள உறுப்புகளில் படர்வதால் அல்லது வளர்வதால் என்டோமெட்ரியோஸிஸ் ஏற்படுகிறது. என்டோமெட்ரியோஸிஸ் ஏற்பட சரியான காரணம் இல்லை.
எனினும் மாதவிலக்கின் போது ரத்தக்கசிவு சரியான பாதையில் செல்லாமல் பின்னோக்கிப் பாய்ந்து சினைப்பை, கருமுட்டைக் குழாய், இடுப்புப் பகுதி ஊடாகச் செல்வதால் கர்ப்பப்பை உட்புறத்திசு இடம் பெயர்கிறது. இதனால் இந்த நோய் ஏற்படலாம். மேலும், கர்ப்பப்பையில் நடைபெற்ற அறுவை சிகிச்சை காரணமாக கருப்பைதிசு இடம் பெயர்கிறது.
அறிகுறிகள்
இந்த நோய்க்கு பல்வேறு அறிகுறிகள் உள்ளன. அதாவது மாதவிலக்கின் போது அல்லது உடலுறவின்போது வயிறு, முதுகு அல்லது இடுப்பைச் சுற்றி கடுமையான வலி ஏற்படும். கூடுதலாக நீடித்த அல்லது ஒழுங்கற்ற ரத்தப்போக்கு இருக்கும். மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, வயிறு உப்புதல், மலம் கழிக்கும்போது வலி மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருத்தல், சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் பிரச்சினைகள் மிகவும் களைப்பாக இருத்தல் மற்றும் குழந்தையின்மை போன்றவை ஏற்படக்கூடும்.
அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங் மூலம் என்டோமெட்ரியோஸிஸ் திசுக்கள் மற்ற இடுப்பு உறுப்புகளுக்குள் இடம் பெயர்ந்திருக்கின்றதா என கண்டறிய இயலும். இந்த நோயை கட்டுப்படுத்த சிகிச்சை முறைகள் உள்ளன. வலியை கட்டுப்படுத்தக் கூடிய வலி மாத்திரைகள், ஹார்மோன் சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை மூலம் பரவி இருக்கும் திசுக்களை அகற்றுவது மற்றும் முற்றிய நிலையில் கருப்பையுடன் கூடிய கருமுட்டைக்குழாய் மற்றும் சினைப்பை நீக்குவதாகும்.
நல்ல தீர்வு
ஆனால் அறுவை சிகிச்சை மட்டும் இதற்கு தீர்வு அல்ல. வலி அதிகமாக இருக்கும் நிலையில் பள்ளி, கல்லூரிக்கோ அல்லது வேலைக்கோ செல்ல முடியாமலோ அன்றாட பணிகளை செய்ய இயலாத வகையில் இருப்பின் டாக்டரை உடனடியாக அணுகுதல் அவசியம். ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு ஆயுர்வேத சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் நிலைமை மேலும் மோசமாகாமல் தடுக்க இயலும்.
ஆரம்பத்தில் ஏற்படும் வலி, ரத்தப்போக்கு ஆகியவற்றிற்கு ஆயுர்வேத சிகிச்சைகள் மூலம் நல்ல தீர்வினை பெறலாம். மாதவிலக்கின் போது ரத்தக்கசிவு சரியான பாதையில் செல்வதற்கும், கர்ப்பப்பையிலுள்ள திசு வேறு இடங்களில் பரவாமல் தடுப்பதற்கும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளான வஸ்தி, விரேசனம் போன்றவை ஆயுர்வேத மருத்துவமனையில் உள்நோயாளிகளாக தங்கி வழங்கும்போது ஹார்மோன் சிகிச்சை, அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை அகற்றுதல் ஆகியவற்றைத் தடுத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை பெற இயலும். மேலும் இதனால் ஏற்படும் பக்கவிளைவான குழந்தையின்மை பிரச்சினையையும் சரிசெய்ய இயலும்.
சிகிச்சை பெற...
மேலும் என்டோமெட்ரியோஸிஸ் குறித்து கூடுதலாக தெரிந்து கொள்ளவும், சிகிச்சை பெறுவதற்கும் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி பெண்கள் மருத்துவ வெளிநோயாளிகள் பிரிவினை (அறை எண்-3) அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்