இரு தரப்பினரிடையே மோதல்- 3 பேர் கைது
இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்;
கபிஸ்தலம்
சுவாமிமலை அருகே உள்ள கொட்டையூரை சேர்ந்த சிவாவுக்கு சொந்தமான லாரியை செல்வம் என்பவர் ஓட்டி வந்து மூப்பக்கோவில் பைபாஸ் சாலை முத்தமிழ் நகரில் நிறுத்தியிருந்தார். பின்னர் அந்த லாரியை தனது நண்பர் குமார் உதவியுடன் பின்நோக்கி இயக்கிய போது அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மகன் ராஜ்குமார் (வயது 28) என்பவர் மீது மோதுவது போல் வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக ராஜ்குமார் தரப்பினருக்கும், செல்வம், குமார் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் மோதிக் கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த குமார், கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து, இரு தரப்பினரும், தனித்தனியே சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகார்களின் அடிப்படையில் சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மூப்பக்கோவிலை சேர்ந்த செல்வம் மகன் பிரபாகரன்( 30), மேலக்கோட்டையூரை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பால்வாடி என்கிற மணிகண்டன் (26), பாபுசெட்டிகுளத்தை சேர்ந்த முருகன் மகன் நிஷாந்த் (22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும், சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.