சரக்கு ஆட்டோ மீது லாரி மோதல்; மேலும் ஒருவர் பலி
சரக்கு ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
கொள்ளிடம் டோல்கேட்,
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அண்ணா நகரை சேர்ந்த டிரைவர் உள்பட 11 பேர் நேற்று முன்தினம் சரக்கு ஆட்டோவில் கும்பகோணத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, கல்லணை- திருச்சி சாலையில் பனையபுரம் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி சரக்கு ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த சத்தியானந்தம் மனைவி சூர்யா (வயது 34), கணேசன் மனைவி லட்சுமி (55) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ டிரைவர் கலையரசன் (35), துர்கா (30), சத்யானந்தம் (36), முருகேசன் (58), பாப்பாயி (55), சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா (32), சித்ரா (34), அச்சுதா (9), ஸ்ரீஹரி (6) ஆகிய 9 பேர் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அச்சுதா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.