47 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் சந்தையூர்-சாப்டூர் இணைப்பு சாலை
47 ஆண்டுகளாக சந்தையூர்-சாப்டூர் இணைப்பு சாலை கிடப்பில் கிடக்கிறது. இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பேரையூர்,
47 ஆண்டுகளாக சந்தையூர்-சாப்டூர் இணைப்பு சாலை கிடப்பில் கிடக்கிறது. இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
47 ஆண்டுகளாக...
டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சந்தையூரில் இருந்து சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் சாப்டூர் வரை இணைப்புச் சாலை அமைக்க கடந்த 1975-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இந்தச் சாலை தற்போது வரை முழுமையாக அமைக்கப்படவில்லை. இந்த இணைப்பு சாலை 5 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றரை கிலோ மீட்டரும், டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை போடப்பட்டது. ஆனால் இந்த இரண்டு பகுதியிலும் சாலை போடப்பட்டு இருந்தாலும் அதற்கு நடுவே ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள மலைப்பாதை சாப்டூர் வனத்துறை கட்டுப்பாட்டில் வருவதால் அவர்களின் அனுமதி கிடைக்காமல் இந்த சாலை முழுமையடையாமல் கடந்த 47 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.
விரைந்து முடிக்க வலியுறுத்தல்
இந்த சாலை அமைக்கப்பட்டால் அந்த பகுதியில் விளையும் பருத்தி, நெல், கடலை, ஆகிய பயிர்கள் விருதுநகர், தேனி மார்க்கெட்டுக்கு செல்ல குறைவான தூரமே ஆகும். இந்த சாலை முழுமையாக அமைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல வருடங்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் செய்தும், இதுவரை இந்த சாலை முழுமையடையாமல் உள்ளது. எனவே இந்த இணைப்பு சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து டி.கல்லுப்பட்டி ஒன்றிய கவுன்சிலர் ராமராஜ் கூறும்போது, 47 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டும் வனத்துறையினர் அனுமதி கிடைக்காததால் சாலை முழுமையடையவில்லை. இந்த சாலை அமைக்கப்பட்டால் இந்த இப்பகுதி மக்கள் பயன் பெறுவார்கள் என்றார்.