‘குளிர்சாதன பெட்டியில் வைத்து இறைச்சி உணவுகளை திரும்ப பயன்படுத்த கூடாது’-உணவக உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை
குளிர்சாதன பெட்டியில் வைத்து இறைச்சி உணவுகளை திரும்ப பயன்படுத்த கூடாது என உணவக உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை கூறினர்.
மதுரை,
குளிர்சாதன பெட்டியில் வைத்து இறைச்சி உணவுகளை திரும்ப பயன்படுத்த கூடாது என உணவக உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை கூறினர்.
ஷவர்மா சாப்பிட்ட சிறுமி சாவு
கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தார். அவரது இறப்புக்கு கெட்டுப்போன இறைச்சியில் செய்யப்பட்ட ஷவர்மா உணவு தான் காரணம் என கண்டறிப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஷவர்மா தொடர்பாக ஆய்வுகளை உணவு பாதுகாப்புத்துறை மேற்கொண்டது. மதுரையிலும் ஆய்வுகள் நடந்தன. முறைகேடுகளில் ஈடுபட்ட உணவகங்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.
எச்சரிக்கை
இந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவக உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. உணவுபாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் தலைமை தாங்கி, இறைச்சி உணவுகளை நன்கு வேகவைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும், உணவகங்களில் உணவுபாதுகாப்புத்துறை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், பணியாளர்களுக்கு மருத்துவ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், சமைத்த உணவுகளை குறிப்பாக இறைச்சி உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து திரும்ப பயன்படுத்தக் கூடாது. உணவுகளில் செயற்கை வண்ணங்களைச் சேர்க்கக்கூடாது, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக்கூடாது, 14 நாட்களுக்குள் இந்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், இல்லாவிட்டால் உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என எச்சரித்தார்.