விபத்தில் காயமடைந்த மூதாட்டி சாவு
விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தார்.;
நெல்லை:
நெல்லை அருகே உள்ள தாழையூத்து குறிச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் வேலு மனைவி சங்கரம்மாள் (வயது 65). இவர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு மீன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று சங்கரம்மாள் வேலை முடிந்து தன்னுடன் வேலை பார்க்கும் 5 பெண்களுடன் ஒரு மினி வேனில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். மினி வேனை வாகைக்குளம் வர்த்தகரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த ஈஸ்வர மூர்த்தி (27) என்பவர் ஓட்டினார்.
நெல்லை நாரணம்மாள்புரம் அருகே சென்ற போது அந்த பகுதியில் இருந்த மின்கம்பம் மீது எதிர்பாராதவிதமாக வேன் மோதியது. இதனால் வேனில் இருந்த சங்கரம்மாள் உள்பட 7 பேரும் காயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினா் 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரம்மாள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.