பூவந்தியில் மாட்டு வண்டி பந்தயம்
பூவந்தியில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
திருப்புவனம்,
பூவந்தியில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
மாட்டு வண்டி பந்தயம்
திருப்புவனம் யூனியனைச் சேர்ந்த பூவந்தியில் தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி உள்பட பல மாவட்டங்களை சேர்ந்த 57 ஜோடி மாடுகள் கலந்துகொண்டன.
இதில் பெரிய மாடுகள் பிரிவில் 10 ஜோடிகளும், சிறிய மாடுகள் பிரிவில் 37 ஜோடிகளும், புள்ளி மாடுகள் பிரிவில் 10 ஜோடிகளாகவும் போட்டிகள் நடைபெற்றன. பெரிய மாடுகள் சென்றுவர 13 கிலோ மீட்டரும், சின்ன மாட்டிற்கு 10 கிலோ மீட்டரும், புள்ளி மாடுகளுக்கு 7 கிலோ மீட்டர் என பந்தய தூரம் நிர்ணயம் செய்து இருந்தனர்.
ஒவ்வொரு பிரிவிலும் 4 பரிசுகள் விதம் ஏற்பாடு செய்து இருந்தனர். மாட்டு வண்டி போட்டியை அமைச்சர் பெரிய கருப்பன், ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜ சேகரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றிபெற்ற மாடுகளுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகளை மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், திருப்புவனம் யூனியன் துணைச் சேர்மன் மூர்த்தி ஆகியோர் வழங்கினார்கள்.
ஏற்பாடு
மாவட்ட தி.மு.க. துணை செயலாளரும் பேரூராட்சி தலைவருமான சேங்கைமாறன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பூவந்தி ஊராட்சி தலைவர் விஜயாஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் மீனாட்சி மணிகண்டன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். போட்டியில் மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன. போட்டிகள் நடைபெற்ற பூவந்தி, திருமாஞ்சோலை, அரசனூர், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளூர் வெளியூர்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர்.