பாவூர்சத்திரம் அருகே 2 கடைகளில் திருடியவர் கைது
பாவூர்சத்திரம் அருகே 2 கடைகளில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே உள்ள அழகம்பெருமாளூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ் (வயது 38). இவர் அந்த பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் இருந்த வெல்டிங் எந்திரம் உள்ளிட்டவைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர் திருடிச் சென்றார்.
இதேபோல் பாவூர்சத்திரம் அருகே பெத்தநாடார்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோசப் ஜெயபாரதி என்பவர் மகிழ்வண்ணநாதபுரம் பஸ்நிறுத்தம் அருகில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கான பொருட்களை பொட்டலூரில் குடோன் வைத்துள்ளார். இவரது குடோனிலும் பாத்திரங்களை மர்ம நபர் திருடிச் சென்றுவிட்டார். இந்த சம்பவங்கள் குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சாலடியூர் அருகே உள்ள டாஸ்மாக் கடை வழியாக வந்த ஒரு நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் தென்காசி அருகே நயினாகரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கரன் என்ற செல்வம் (49) என்பதும், 2 கடைகளிலும் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சங்கரனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து திருட்டு போன பொருட்கள், மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. கைதான சங்கரன் மீது மேலும் 9 திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.