தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி
தமிழக கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று கூறிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டிக்கிறோம். நீட் தேர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார். தமிழகத்தில் மத நல்லிணக்கத்துக்கு எதிராக செயல்படும் கவர்னரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றதற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். நீண்ட காலமாக சிறையில் இருக்கும் 38 பேரை விடுதலை செய்ய வேண்டும். இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும். சங்கரன்கோவில்-கழுகுமலை ரோட்டில் உள்ள குளத்தில் அமலைச்செடிகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில வர்த்தகர் அணி செயற்குழு உறுப்பினர் ஜாபர் அலி உஸ்மானி, மாவட்ட செயலாளர்கள் திவான் ஒலி, இம்ரான்கான் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.