இலங்கை மக்களுக்கு உதவிட சாலை பணியாளர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்கிட முடிவு

இலங்கை மக்களுக்கு உதவிட சாலை பணியாளர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-05-08 17:54 GMT
பெரம்பலூர்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செல்லச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில தலைவர் சண்முகராஜா கலந்து கொண்டு மாநாடு குறித்து பேசினார். மேலும் அவர் சங்கத்தின் 7-ம் மாநில மாநாடு வருகிற ஜூன் 11, 12-ந் தேதிகளில் பெரம்பலூரில் நடைபெறவுள்ளது. இதில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார். பொருளாதார வீழ்ச்சியால் உணவின்றி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிட தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றும் 10 ஆயிரம் சாலை பணியாளர்கள் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை வழங்கவுள்ளனர் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் மாநாட்டு வரவேற்பு குழுவுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்