பொன்னமராவதி, ஆலங்குடியில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்
வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். நீர்நிலை நிலங்கள் மற்றும் கோவில் மடத்து நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். நீர்நிலை, கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களை வெளியேற்றும் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் என்.பக்ருதீன் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன் சிறப்புரையாற்றினார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, நல்லதம்பி, குமார், சாத்தையா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வட்டாட்சியர் திலகத்திடம் மனுக்களை அளித்தனர். முன்னதாக வட்டாட்சியர் அலுவலகத்தில் மனுக்களை வாங்க அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தலைமையிடத்து வட்டாட்சியர் திலகம் விரைந்து வந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதேபோல் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல், மணிவண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் ஒன்றியச் செயலாளர் ஏ.ஆர்.பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.