தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-05-08 17:40 GMT
அரியலூர்
பட்டுப்போன மரம் அகற்றப்படுமா?
அரியலூரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வாசலில் 25 அடி உயரமுள்ள மரம் ஒன்று பட்டுப்போய் உள்ளது. தற்போது மரம் காய்ந்த நிலையில் உள்ளதால் அதன் கிளைகள் சிறிது சிறிதாக உடைந்து கீழே விழுந்து வருகிறது. பலத்த காற்று வீசினால் மரம் வேரோடு விழுந்து உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பட்டுப்போன மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், அரியலூர். 

சாலையின் நடுவே மெகா பள்ளம்
பெரம்பலூர் மாவட்டம்,  நல்லேந்திரபுரத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலையின் நடுவே மெகா பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். தற்போது பள்ளம் இருப்பது தெரிவதற்கு எச்சரிக்கையாக ஓலைகள் வைத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மெகா பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ளது மனியாரம்பட்டி கிராமம். இங்கு மின்சார கம்பிகள் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிறிஸ்டி, ஆலங்குடி, புதுக்கோட்டை.

ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், தேவர்பட்டி கிராமத்தில் ஏராளமன பொதுமக்கள் வசித்து வருகி்ன்றனர். இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு குழாய் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து எப்போது வேண்டுமாலும் கீழே விழுந்து உயிர் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெய்யப்பன், தேவர்பட்டி, புதுக்கோட்டை

வேகத்தடைகளில் வர்ணம் பூச கோரிக்கை
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள காகித ஆலை பகுதியில் தேவையற்ற முறையில் ஏராளமான வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் வெள்ளை வர்ணம் பூசாமல் உள்ளது. மேலும் வேகத்தடைகள் அனைத்தும் மிகவும் சிறியதாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளில் வர்ணம் பூச வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், புன்னம் சத்திரம், கரூர். 

புதர்மண்டி காட்சியளிக்கும் பொது கழிவறைகள்
கரூர் மாவட்டம்,வேலாயுதம்பாளையம் குளிர்ந்த மலை மாணிக்க தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக பொது கழிவறைகள் ஒன்று  உள்ளது. தற்போது அந்த கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாமல் போய் விட்டது. இதனால் கழிப்பறைகளை சுற்றி முட்செடிகள் முளைத்து புதர் மண்டி காட்சி அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது கழிவறைக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தியும், சுற்றியுள்ள முட்செடிகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மித்திரன் ராதா, வேலாயுதம்பாளையம்.

மேலும் செய்திகள்