சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பேட்டி
சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம் எனகரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
கரூர்,
பேட்டி
கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தருமபுரம் ஆதினத்தில், பல்லக்கில் ஆதினத்தை விரும்பிதான் தூக்குகிறார்கள் என்பது ஏற்புடையது அல்ல. இறை உணர்வுக்கு விரோதமாக கூறவில்லை. இதில் பா.ஜ.க. அரசியல் செய்வது என்பது வன்மையான கண்டனத்து உரியது. சட்டசபையில் நிதிஅமைச்சர் நிதிசுமை சூழ்நிலை காரணமாக பழைய பென்சன் திட்டத்தை எங்களால் செயல்படுத்த முடியாது என அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அதிர்ச்சியாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது. பழைய பென்சன் திட்டம் சாத்தியமே இல்லை என்று சொல்வதை முதல்-அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும்.
போராட்டம்
நூல்விலை தினமும் உயர்ந்து கொண்டே செல்வதால் ஜவுளி தொழில் பெரிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. சமையல் எரிவாயு விலையை மனசாட்சியே இல்லாமல் ஏற்றுகிறார்கள். ஒரு வருடத்தில் சிலிண்டரின் விலை ரூ.380 ஏற்றப்பட்டுள்ளது. கலால் வரி போட்டால் அதற்கு மாநிலங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும். செஸ் வரி போட்டால் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
கடந்த 5,6 ஆண்டுகளில் ரூ.28 லட்சம் கோடி செஸ் வரி மூலம் மத்திய அரசுக்கு செல்கிறது. சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு செஸ் வரி போட்டு, சமையல் எரிவாயு விலையை உயர்த்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமா?.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம். மாட்டு வண்டிகளுக்கு தமிழ்நாடு முழுவதும் குவாரிகளில் மணல் கொடுக்கிற நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.