90 நீர் நிலைகளில் 190 ஹெக்டேர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க புத்தகத்தை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டார். அப்போது 90 நீர் நிலைகளில் 190 ஹெக்டேர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
கடலூர்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட துறை வாரியான சாதனை விவரங்கள் அடங்கிய ஓராண்டு ஆட்சி, ஓயா உழைப்பின் ஓராண்டு என்ற புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இந்த புத்தகத்தை கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட, அதை கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங் பெற்றுக்கொண்டார். இதில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தடுப்பூசி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் 4-வது அலை பாதிப்பு இல்லை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 2-வது தவணை தடுப்பூசி 100 சதவீதம் போடப் பட்டுள்ளது.
15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 95 சதவீதம் பேருக்கும், 12 -14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 90 சதவீதம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த ஓராண்டில், உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் 19 ஆயிரத்து 117 மனுக்கள் பெறப்பட்டு, அதை 80 நாட்களுக்குள் தீர்வு கண்டு உள்ளோம்.
ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
கொரோனா தொற்றால் உயிரிழந்த 2101 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம், ரூ.10 கோடியே 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் உதவித்தொகை 1 லட்சத்து 47 ஆயிரத்து 296 பேருக்கு மாதந்தோறும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக 121 புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 979 நீர்நிலை ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, அதில் 90 நீர்நிலைகளில் 190 ஹெக்டேர் நிலங்கள் ஆக்கிரமிப்பு எடுக்கப்பட்டு புனரமைப்பு செய்து வருகிறோம். அருவா மூக்கு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தது. விரைவில் இந்த பணிகள் தொடங்கும். 29 ஆயிரத்து 616 பேருக்கு ரூ.116 கோடி நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் வீணாகினால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.